இங்கிலாந்து கடவுச்சீட்டு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 5 வாரங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரையான 5 வார காலப்பகுதியில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனால் குறித்த 5 வாரங்களுக்கும் இங்கிலாந்து கடவுச்சீட்டு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சுமார் 1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு அலுவலகங்களின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பணிபுரியும் பொது மற்றும் வணிகச் சேவைகள் (Public and Commercial Services union) ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.
இந்தப் போராட்ட நடவடிக்கை, கடவுச்சீட்டு விநியோகத்தில் “குறிப்பிடத்தக்க தாக்கத்தை” ஏற்படுத்தும் என்று மேற்படி ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் கடவுச்சீட்டு அலுவலகங்களில் சுமார் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.