தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவாகி உள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளி அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பல நாடுகளில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் இந்தியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது.
மேலும் இது பூமிக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, குவெட்டா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கினர்.
வடமேற்கு பாகிஸ்தானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியானதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தலீபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளிலும் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.