சிங்கப்பூரில் இணையத்தின் ஊடாக சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் முயற்சிகளை முறியடிக்கும் அதிரடிச் சோதனையில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இது குறித்து 44 வயது நபரிடம் தொடர் விசாரணை நடத்திவருவதாக சிங்கப்பூர் பொலிஸார் கூறுகின்றனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 22 வயதில் இருந்து 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்களைத் துன்புறுத்துவதைக் காட்டும் பொருள்களை வைத்திருந்தது, ஆபாசப் படங்களைப் பரிமாறிக்கொண்டமை உள்ளிட்ட குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஐந்து வாரம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது மின்னியல் சாதனங்கள், கணினிகள், அலைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறுவர்களைத் துன்புறுத்தும் பாலியல் படங்களை வைத்திருந்த அல்லது அணுகிய குற்றம் உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படக்கூடும் எனத் தெரியவருகின்றது.
சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் பொலிஸார் கூறியுள்ளனர்.