இந்தியாவில் அண்மைக் காலமாக ஒன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, தமிழகத்தில் மாத்திரம் இதுவரை 45க்கும் மேற்பட்டவர்கள் இதனால் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஒன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி ஒன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது.
எனினும், இம்மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதற்கு தமிழக அரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்லைன் சூதாட்ட தடைசட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஒன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அவரின் ஒப்புதலைத் தொடர்ந்து ஒன்லைன் சூதாட்டம் தடைச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்படுமெனக் குறிப்பிடப்படுகின்றது.