அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்கு பகுதிக்கு விடுமுறைக்காக சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தந்தை எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர்கள், குயின்ஸ்லாந்தில் விடுமுறையில் இருந்தபோது, சுற்றுலாப் பயணிகளுடன் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டனர்.
கெய்ர்ன்ஸில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான இந்த நீர்வீழ்ச்சி, வழுக்கும் பாறைகள் மற்றும் வலுவான நீரோட்டங்களுக்கு பெயர் பெற்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மற்றவர்களுடன் தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்றனர், அப்போது அவர்களும் நீரோட்டத்தில் சிக்கினர்.
மூவரும் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாக தகவல் கிடைத்ததும், அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறிது நேரத்தில், தந்தையும் மகனும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று குயின்ஸ்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.