நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடல்க்கு (வயது 78) உடல்நல பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவரை டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராம்சந்திரா பவுடெல்க்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மகராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக பயிற்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு ஒட்சிசன் குறைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டமையும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக அவரை டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். இதன்படி, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று (19) அனுமதிக்கப்படவுள்ளார்.
நேபாள கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல், இவ்வாண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதியே அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.