மலேசியாவில் மங்கோலிய மாடல் அழகி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தண்டிக்கப்பட்ட மலேசியாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரியான சிருல் உமருக்கு, அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என அவரது மகன் சுக்ரி அசம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
2006ஆம் ஆண்டு, மலேசியாவின் செலாங்கூர் வனப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மங்கோலிய மாடல் அழகியின் உடல் வெடிபொருட்களை கொண்டு சிதைக்கப்பட்டது.
இவ்வழக்கில் பொலிஸ் அதிகாரியான சிருல் உமரும் மற்றொரு சக அதிகாரியும் மலேசிய உயர் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டனர். பின்னர் 2013இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தண்டனையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், 2015இல் மலேசிய உச்சநீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்தது.
எனினும், இந்த இறுதி தீர்ப்புக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த முன்னாள் மலேசிய பொலிஸ் அதிகாரியின் புகலிட கோரிக்கையை 2019இல் ஆஸ்திரேலியா நிராகரித்தது.
கொலை உள்ளிட்ட தீவிரமான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை மலேசியா நீக்கியுள்ள போதிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள சிருல் உமருக்கோ அவரது மகனுக்கோ மலேசியா திரும்பும் எண்ணம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது முன்னாள் மலேசிய பொலிஸ் அதிகாரி சிருல் உமரின் மகன் சுக்ரி அசம் 6 வயது குழந்தையாக இருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
“நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது, புதிதாக அனைத்தையும் தொடங்கலாம் என எண்ணியிருந்தோம். எனது வாழ்க்கையில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் மலேசியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ எந்த தவறையும் செய்யவில்லை என்பதால் எனது தந்தைக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுங்கள்,” என தற்போது 23 வயது இளைஞராக உள்ல சுக்ரி அசம் கூறியுள்ளார்.
இவர் தற்போது தனது தந்தையின் அரசியல் தஞ்சத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு பொலிஸ் அதிகாரியின் அசீலாஹ் தூக்குத்தண்டனையை எதிர்கொண்டுள்ள கைதியாக மலேசியாவின் Kajang சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.