வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் வீடுகள், வாகனங்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்திய இன மோதல்களில் மக்கள் பலர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பழங்குடியினர் அந்தஸ்துக்கான மாநிலத்தில் உள்ள முக்கிய இனக்குழுவின் கோரிக்கைகளை எதிர்த்து பழங்குடி சமூகங்கள் கடந்த வாரம் ஒரு பேரணியை நடத்தியதை அடுத்து வன்முறை தொடங்கியது.
மாநிலத்தின் 53% மக்கள் தொகையைக் கொண்ட மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு வன நிலங்களை அணுகவும், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களின் விகிதத்தை உத்தரவாதப்படுத்தவும், பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்ட சமூகங்கள், குறிப்பாக மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கிகள், மெய்தேயின் கோரிக்கை ஏற்கப்பட்டால், தங்கள் மூதாதையர் வன நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று கவலைப்படுகிறார்கள்.
திங்களன்று, இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதியைக் காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஊடகமொன்றுக்கு கூறினார்.
இந்த நிலையில், 23,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு, தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.