ஜப்பான் – ஹிரோஷிமாவில் நடைபெறுகிற ‘ஜி-7’ உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஜி-7′ உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது பற்றி அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பை கூறியதாவது,
“’ஜி-7’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடன் பதவி ஏற்றதில் இருந்து நமது கூட்டணிகளுக்கும், கூட்டாளித்துவத்துக்கும் புத்துயிர் அளிப்பதுவும், உலகம் முழுவதும் அமெரிக்காவின் தலைமையை மீண்டும் நிலை நிறுத்துவதும் அவரது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
‘ஜி-7’ உச்சி மாநாட்டின் மத்தியில் ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசையும் சந்திக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜி-7’ உச்சி மாநாடு
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் ‘ஜி-7’ என்ற அமைப்பின் கீழ் இயங்குகின்றன.
இந்த ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் நாளை (19) தொடங்கி, எதிர்வரும் 21ஆம் திகதி முடிகிறது.
இந்த மாநாட்டுக்கு இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ் மற்றும் குக் தீவு ஆகிய 8 நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.