இங்கிலாந்தில் விசாவை பெற்றுக்கொடுப்பதற்காக பெண் ஒருவரின் குழந்தைக்கு போலி தந்தையான நடிக்கும் இங்கிலாந்து பிரஜைக்கு 10,000 பவுண்டுகள் வழங்கப்படுகிறது.
பிபிசி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த புலனாய்வு அறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வாழும் புலம்பெயர்ந்த பெண் ஒருவர், இங்கிலாந்து நபரொருவரால் கர்ப்பமானால், அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு இங்கிலாந்து குடியுரிமை கிடைத்துவிடும். இதனால் குறித்த பெண்ணுக்கும் இங்கிலாந்து விசா கிடைத்துவிடும்.
இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, ஒரு நூதன மோசடி இடம்பெற்று வருவதை, பிபிசி பெண் ஊடகவியலாளர் ஒருவர், மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்துள்ளார்.
அப்பெண் ஊடகவியலாளர், வியட்நாம் நாட்டவரான தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தன் குழந்தைக்கு பாஸ்போர்ட் பெற விரும்புவதாகக் கூறுகிறார். அதற்கு அந்த மோசடி கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், அது மிகவும் எளிது எனக் கூறுகிறார்கள்.
அப்போது, தந்தையாக நடிக்க இருக்கும் நபர் தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்க, அந்தப் பெண், 9,000 பவுண்டுகள் கொடுக்கலாம் என கூறுகிறார்.
தந்தையாக நடிக்கும் நபர், சிரித்தபடி அந்த ஊடகவியலாளருடன் செல்பிக்கள் எடுத்துக்கொள்கிறார். இந்த ஜோடி உண்மையான தம்பதிதான் என அதிகாரிகளுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக இந்த புகைப்படங்களை எடுப்பதாகவும் மோசடிக்காரர்கள் கூறுகிறார்கள்.
இப்படி, பணத்துக்காக தந்தைகளை ஏற்பாடு செய்யும் தரகர்கள் ஆண்களும் பெண்களும் இங்கிலாந்தில் இருக்கிறார்கள் என குறித்த புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி – பிபிசி