கிரீஸ் அரசுடன் பணியாற்றும் முகமூடி அணிந்த நபர்கள் சிலர், புகலிடம் தேடி வந்த சோமாலியா, எரித்திரியா, எத்தியோப்பியா நாடுகளைச் சேர்ந்த 12 அகதிகளிடம், பொருட்களைப் பறித்துக் கொண்டு, அவர்களை நடுக்கடலில் விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இந்த அதிர்ச்சிச் சம்பவத்தை வீடியோ வாயிலாக நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, கிரீஸ் நாட்டில் தஞ்சம் கோரும் எண்ணத்துடன் துருக்கியிலிருந்து கைக்குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் படகில் பயணித்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, கிரீஸ் நாட்டை சென்றடைந்த நிலையில், அகதிகளை சுற்றிவளைத்த முகமூடி நபர்கள், அவர்களது ஹிஜாப்களை கிழித்து பணம், அலைபேசிகளை பறித்துக்கொண்டு, ஒரு வேனில் பல மணி நேரம் அடைத்து வைத்திருக்கின்றனர்.
பின்னர், அகதிகளை அதிவேக படகில் அழைத்துச் சென்று, கிரீஸ் கடலோர காவல்படையின் படகுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, கிரீஸ் நாட்டு கடல் எல்லை அருகே அழைத்துச் செல்லப்பட்டு, சிறிய படகில் அகதிகளை கைவிட்டுச் சென்றிருக்கின்றனர். பின்பு இந்த அகதிகளை துருக்கி அதிகாரிகள் மீட்டிருக்கின்றனர்.
“அந்த நாள், நாங்கள் உயிர் பிழைப்போம் என நினைக்கவில்லை. எந்த கருணையுமின்றி, அந்தச் சிறிய படகில் எங்களை விட்டுச் சென்றனர்,” என 27 வயதான சோமாலிய அகதி நைமா ஹசன் கூறியிருக்கிறார்.
அகதிகளை படகில் ஏற்றி அனுப்பும் காட்சிகள், ஆஸ்திரிய நாட்டு தொண்டு ஊழியர் ஒருவர் மூலம் கிடைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடம் கோருவதற்கான விதிகள், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான கடமைகளை கிரீஸ் மதிக்க வேண்டும் என புலம்பெயர்வுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் பேச்சாளர் அனிட்டா ஹிப்பர் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த விளக்கத்தையும் கிரீஸ் அரசு தரப்பு அளிக்கவில்லை.