பிரான்ஸில் தனது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பிரான்ஸ் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், பிரான்ஸ் – பிரிட்டானி, (Brittany) குயிம்பருக்கு வடக்கே (North of Quimper) உள்ள செயிண்ட்-ஹெர்போட் (Saint-Herbot) கிராமத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது, தந்தை – தாய், 8 வயது சகோதரி மற்றும் மேற்படி சிறுமி என குடும்பத்தார் அனைவரும் பார்பிக்யூவை (BBQ) அனுபவித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ஹெட்ஜ் மூலம் துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார்.
இதன்போது, 11 வயது சிறுமி சம்பவ இடத்தில் பலியானதுடன், சிறுமியின் பெற்றோரும் காயமடைந்தனர். தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மரணித்த சிறுமியின் 8 வயது சகோதரி அபயக் குரல் எழுப்பி, பிறிதொரு பக்கத்து வீட்டிற்கு ஓடிச் சென்று உயிர்தப்பியுள்ளார். எனினும், சம்பவ அதிர்ச்சியில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
71 வயது நெதர்லாந்து பிரஜையான சந்தேகநபர், சம்பவத்தைத் தொடர்ந்து தனது வீட்டில் மறைந்துகொண்டுள்ளார். எனினும், இறுதியில் பொலிஸில் சரணடைந்துள்ளார். அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு குடும்பங்களின் இரண்டு சொத்துக்களையும் ஒட்டிய காணி தொடர்பாக பிரித்தானிய குடும்பத்துடன் அந்த நபர் தகராறில் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்னர்.
குறித்த இங்கிலாந்து குடும்பம் பல ஆண்டுகளாக பிரான்ஸில் உள்ள மேற்படி கிராமத்தில் வசித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.