அவுஸ்திரேலிய பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என அவுஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப் கூறியுள்ளார்.
சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், செனட் சபையில் கண்ணீர் விட்டு ஆற்றியுள்ள உரையில், பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார். தற்போது, தோர்ப் லிபரல் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் என்பவர் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார்.
வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாக தெரிவித்த தோர்ப், பாராளுமன்ற விதிகளின்படி தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஸ்கை நியூஸ் தொகுப்பாளரும் முன்னாள் லிபரல் கட்சியின் எம்.பி.யுமான அமண்டா ஸ்டோக்கர், டேவிட் வான், ஒரு பாராளுமன்ற நிகழ்ச்சில் தனது அந்தரங்க உறுப்பை அழுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயத்தை இரகசியமாக வைத்திருந்ததாகவும் ஆனால், லிடியா தோர்ப்பின் புகாரை அடுத்து, இனி அவ்வாறு இருக்க முடியாது என்றும் அவர் கூறி உள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என மறுத்த வான், இதனால் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் வான்-ஐ கட்சி இடைநீக்கம் செய்து விட்டது.