தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு 2022ஆம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை பேஸ்புக் கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும் செயல் என்பதால் கணக்கு முடக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், நான் விதியை மீறும் வகையில் எந்தப் பதிவுகளையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார்.
மேலும், முடக்கப்பட்ட தனது பேஸ்புக் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர பேஸ்புக் நிறுவனத்தை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார்.
ஆனால், அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசன், எந்த விதக் காரணமும் இன்றி தனது கணக்கை முடக்கிய பேஸ்புக் மீது ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், ஜெசனின் கணக்கை முடக்கியதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனத்தால் தெரிவிக்கமுடியவில்லை.
இதனை தொடர்ந்து எந்த வித காரணமும் இன்றி பயனாளரின் பேஸ்புக் கணக்கை முடக்கியதற்காக சம்பந்தப்பட்ட பயனாளருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, முடக்கப்பட்ட ஜெசனின் பேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், ஜெசனுக்கான இழப்பீட்டுத் தொகையை பேஸ்புக் இதுவரை வழங்கவில்லை எனத் தெரியவருகிறது.