நெதர்லந்து பிரதமர் மார்க் ரட்ட (Mark Rutte) பதவி விலகி, அமைச்சரவையைக் கலைத்ததால், கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது.
குடியேறிகள் தொடர்பான கடும் சர்ச்சைக்கு இடையே அவர் பதவி விலகினார்.
நெருக்கடி குறித்து 4 கட்சிக் கூட்டணிக்குள் பல நாட்கள் பேச்சு நடைபெற்றது. இருந்த போதும், வேறுபாடுகளுக்குத் தீர்வு காண முடியவில்லை என மார்க் ரட்ட தெரிவித்தார்.
குடியேற்றம் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமான, பெரிய பிரச்சினை. அதில் இணக்கம் காணத் தவறியதால், அமைச்சரவை கூடி நிலைமையை விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், கூட்டணி அதன் அரசியல் அடித்தளத்தை இழந்துவிட்டதாக அமைச்சரவை ஒருமனதாக முடிவுசெய்தது என்றும் அவர் தெரிவித்தார்.
நெதர்லந்தின் அதிக காலம் சேவையாற்றியுள்ள பிரதமர் ரட்ட. அவரது கூட்டணியின் தவணைக்காலம் 2025 இறுதியில் முடிய வேண்டியது. அவர் பதவி விலகிவிட்டதால், நாடாளுமன்றக் கீழ் சபைக்கு இவ்வாண்டுப் பிற்பகுதியில் பொதுத் தேர்தல் நடைபெறும்.
எனினும், நவம்பர் நடுப்பகுதிக்கு முன்னதாகத் தேர்தலை நடத்தும் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் வரை பராமரிப்பு அரசாங்கத்தை வழிநடத்தப் போவதாக ரட்ட கூறியுள்ளார்.
புதிய குடியேறிகள் நாட்டுக்குள் வருவதைக் குறைக்கும் அவரது திட்டத்தால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.