தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில், ரெலோ, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரித்தானிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
லண்டன், ஹரோவில் அமைந்துள்ள கலந்துரையாடல் மண்டபம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) சுமார் இரண்டு மணி நேரம் இக்கலந்துரையாடல் நீடித்தது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய கிளை சார்பாக சாம், ரூபன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானிய கிளை சார்பாக சிவபாலன், அல்வின், முகுந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக பிரபு, பரமேஸ், சஜீ ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜனா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டின் இன்றைய கள நிலவரங்கள், யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத்திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்கப் போகும் தேர்தல்கள், தலைமை காரியாலயம் தொடர்பான விடயங்கள் மற்றும் நிதி தொடர்பான விடயங்கள் என பல விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அவற்றை உள்வாங்கிய உறுப்பினர்கள், அதற்கான தமது கருத்துளையும் ஆலோசனைகளையும், தமது கேள்விகளையும் முன் வைத்து பதில்களையும் ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்றும், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி, நிர்வாக கட்டமைப்பை தெரிவுசெய்தல் என்ற முடிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.