உலகில் அதிகரித்து வரும் வெப்ப நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் அதிகரித்த வெப்பம் நிலவுகின்றது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.
இந்நிலையில், புவி வெப்பமடைதலின் விளைவுகளை நினைவூட்டும் வகையில், வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசியா வரை சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் தீவிர வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியுள்ளதாவது,
“வெப்ப அலைகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளுக்கு உலகம் தயாராக வேண்டும். வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர்.
“வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.