போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புட்டினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது நடந்த உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புட்டின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யலாம் என தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஒருவரை போர் குற்றவாளி என வாய்மொழியில் எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், போர்குற்றவாளி என ஒருவரை அறிவிப்பது சாதாரணமான விசயம் அல்ல. அதற்கென சில வழிமுறைகளும், கோட்பாடுகளும் உள்ளன.
வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து கொலை செய்வது, எதிரி நாட்டு படையை விட பன்மடங்கு படைபலத்துடன் சண்டையிடுவது, தாக்குதல்களில் இருந்து தப்பிக்க மனிதர்களை கேடயங்களாக பயன்படுத்துவது, பணயக் கைதிகளை பிடித்து வைப்பது, ராணுவ உதவியுடன் கொலை செய்வது மற்றும் பேரழிவை ஏற்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு அவை நிரூபிக்கப்பட்டால் அவர் போர் குற்றவாளி என அறிவிக்கப்படுவார்.
இதுபோன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நாடுகளின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தும். மனிதாபிமானமின்றி நடத்தப்பட்ட தாக்குதல்கள், பொதுமக்களை குறிவைத்து நேரடியாக நடத்தப்படும் தாக்குதல்கள், கொலை, இன அழிப்பு, கட்டாய இடமாற்றம், சித்திரவதை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபட்டது உறுதியானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும்.
இதேபோல் இலங்கை தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த மகிந்தா ராஜபக்ஷவையும் ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்காமைக்கு என்ன காரணம்?
இவை இப்படியிருக்க நாம் புட்டினிடம் வருவோம்.
இந்நிலையில், தென் ஆபிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புட்டின் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்கட்சியான ஜனநாயகக் கூட்டணி கட்சியும் புட்டினுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, பிரிட்டோரியாவில் உள்ள கவுடெங் உயர் நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்தது.
புட்டின் தென்னாப்பிரிக்காவில் எப்போதாவது கால் வைத்தால் அவரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.