போதை தலைக்கேறி அருகில் இருந்த தாய் மகள் ஆகிய இரு பயணிகளையும் ஒரு ஆண் பயணி பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இது தொடர்பில் விமான ஊழியர்களிடம் குறிப்பிட்ட போதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த சம்பவம் கடந்த (26 /7/2023) அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் நடைபெற்றது. குறித்த பயணி கேட்ட போதெல்லாம் அந்த பயணிக்கு மதுவை வழங்கிய விமான ஊழியர்கள் அவரின் சேட்டைகளை அந்த பெண் கூறிய போது கணக்கில் எடுக்காமல் சிறிது பொறுத்து கொள்ளுங்கள் என்றுள்ளார்.
இதைப் பார்த்த மற்றொரு ஆண் பயணி, பீதியடைந்து காணப்பட்ட அந்த சிறுமிக்கு தனது இருக்கையை கொடுத்துள்ளார். அவர் போதையில் இருந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் இடையில் அமர்ந்து பயணித்துள்ளார்.
விமானம் தரையிறங்கியபோது, விமான ஊழியர்கள் அந்த பெண்ணுக்கும், மகளுக்கும் 5000 கிமீ இலவச பயணம் செய்வதற்கான சலுகையை வழங்குவதாக கூறி, மன்னிப்பும் கேட்டுள்ளது. ஆனால் தவறு செய்த பயணி மீதான நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாய், மகள் சார்பில் விமான நிறுவனத்துக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயணி தவறு செய்யும்போது விமான நிறுவனம் அலட்சியமாக இருந்ததற்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 மில்லியன் டாலர் வழங்கவேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.