ஆப்கானிஸ்தானின் பிரபலமான பேண்ட்-எ-அமிர் (Band-e-Amir) தேசிய பூங்காவுக்குப் பெண்கள் செல்வதைத் தடுக்க தலிபான் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பெண்கள் பேமியன் (Bamiyan) வட்டாரத்தில் உள்ள பேண்ட்-எ-அமிருக்குச் செல்லும்போது ஒழுங்காக முக்காடு அணிவதில்லை என அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்த வாரம் அமைச்சர் முகமது காலிட் ஹனாஃபி (Mohammad Khalid Hanafi) பேமியன் வட்டாரத்திற்குச் சென்றிருந்தார்.
பெண்கள் முக்காட்டை ஒழுங்காக அணிவதில்லை என்பதால் அவர்கள் அந்தப் பூங்காவுக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
“ஏற்கெனவே பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமான நடமாட்டம் ஆகியவற்றிற்குத் தடை விதித்துள்ள தலிபான் இப்போது அவர்கள் இயற்கைசார்ந்த இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதித்திருக்கிறது,” என மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் பெண் உரிமைக்கான துணை இயக்குநர் எழுத்துபூர்வமாகக் கூறியிருந்தார்.
“படிப்படியாக ஒவ்வொரு வீடும் சிறையாக மாறுகிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.