நியூசிலாந்து இதன் தலைநகரம் வெலிங்டன்.இந்நாட்டிலுள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது. பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது.
வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன.
பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டது. சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கும் மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது வயிற்றில், சாப்பிடும் தட்டின் அளவிற்கு ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பெண்ணிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டது.
அது, மருத்துவர்களால் அறுவை சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் அலெக்ஸிஸ் ரிட்ராக்டர் (Alexis retractor) என்பது தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சையில், அறுத்த தசைகளை தற்காலிகமாக விலக்கியே வைத்திருந்தால்தான் மருத்துவர்கள் கைகளாலும், உபகரணங்களை கொண்டும் சிகிச்சையை தொடர முடியும்.
இதற்காக பயன்படுத்தப்படும் ரிட்ராக்டர் எனப்படும் உபகரணம்தான் அப்பெண்ணின் வயிற்றில் இருந்துள்ளது. அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய இதனை, மருத்துவர்கள் கவனக்குறைவாக அப்பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தையல் போட்டுள்ளனர்.
கதிரியக்க ஊடுருவலை தடுக்கும் பொருளால் உருவாக்கப்பட்டதால், அந்த உபகரணம் எக்ஸ்-ரே பரிசோதனையில் கண்டறியப்படவில்லை. “இது குறித்து மருத்துவமனையிலிருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கவில்லை. ஆக்லேண்டு மருத்துவமனையின் சுகாதார பராமரிப்பு, அடிப்படை தரத்திற்கும் கீழ்நிலையில் இருந்திருக்கிறது” என அந்நாட்டின் மருத்துவ துறையின் ஆணையர் இது குறித்து கூறினார்.
அயல் நாடுகளில் மருத்துவ பராமரிப்பும், சுகாதார முறைகளும் உலகத்தரத்தில் விளங்குவதாக கருதும் போது, இது போன்ற செயல்கள் அங்கு நடப்பது வியப்பளிப்பதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.