கனடாவின் சில பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி, நாட்டு பிரஜைகளுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மாணவர்களைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்து குடியேறவும், கல்வி பயிலவும் இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடாகத் திகழ்கிறது கனடா. இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு உறவும் வலுவாக உள்ளது.
பயணம் செய்யப் பாதுகாப்பான நாடு, கனடா என்பதை ஒட்டாவா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கனடா சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வான்கூவர் நகருக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் அதை இந்தியா மறுத்துள்ளது.
குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக கனடா சொல்கிறது. இருப்பினும், இதுவரை எந்த ஆதாரத்தையும் கனடா வெளியிடவில்லை.
மேலும், கனடா மற்றும் இந்தியா ஆகியன அவற்றின் மூத்த அரசதந்திர அதிகாரிகளை தத்தம் நாடுகளை விட்டு வெளியேற்றியுள்ளன.