அண்டை நாடான லெபனான் மீதும் திடீர் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது 5 நாட்களாக குண்டுமழை பொழிந்து வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்திற்குச் சொந்தமான கண்காணிப்புச் சாவடியை தங்களது போர் விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதாவது, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உலகின் அரிதான தொலைபேசி அழைப்பு!
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் இஸ்ரேல்-காசா மோதல் குறித்து புதன்கிழமையன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக தெஹ்ரானில் உள்ள அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஏழு ஆண்டுகால விரோதப் போக்கிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சீனா பேச்சுவார்த்தை நடத்திய பிறகான முதல் தொலைபேசி அழைப்பு இதுவாகும்.
ரைசியும் முகமது பின் சல்மானும் “பாலத்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று விவாதித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – மொசாட்டை திணரடித்த ஈரூடக தாக்குதல்
சௌதி பட்டத்து இளவரசர் “அனைத்து சர்வதேச, பிராந்திய கட்சிகளுடனும் தொடர்புகொள்வதில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்” செய்து வருவதாக சவுதி அரச செய்தி நிறுவனமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது.
எந்த வகையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சௌதி அரேபியா ஏற்காது என்பது பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியதாக எஸ்.பி.ஏ. தெரிவித்துள்ளது.
மூலம் – பிபிசி