இஸ்ரேல் – காஸா மோதல் மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த மோதலில் பாலஸ்தீன வட்டாரத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் பாடசாலையைச் சேர்ந்த ஊழியர்களும் மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதில் குறைந்தது 11 ஊழியர்களும் 30 மாணவர்களும் உயிரிழந்துள்ளமையை ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
காஸாவில் சிக்கியுள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வழிகளை அமெரிக்கா, எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆராய்ந்து வருகின்றன.
காஸா நெருக்கடி குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு மன்றம் நாளை (13) கூடவிருக்கிறது.
ஐ.நா நிறுவனத் தலைமைச் செயலாளர் ஆன்ட்டோனியோ குட்டெரஸ் (António Guterres) செய்தியாளர்களைச் சந்தித்தார். இஸ்ரேலும் காஸாவும் வன்செயல் சூழலில் சிக்கியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
தென் லெபனானில் (Southern Lebanon) இருந்து தாக்குதல் நடக்கும் சாத்தியம் குறித்து அவர் அச்சம் தெரிவித்தார்.
காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
எல்லா நேரமும் அனைத்துலகச் சட்டம் மதிக்கப்பட வேண்டுமெனத் குட்டெரஸ் கேட்டுக்கொண்டார்.
காஸாவிலுள்ள ஐ.நா நிறுவனக் கட்டடங்களில் சுமார் 220,000 பாலஸ்தீனர்கள் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்தக் கட்டடங்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.