ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு எனும் இந்த அமைப்பு, ஐ.நா. சபைக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர் நாடுகள் (57 நாடுகள்) உள்ள ஒரு அமைப்பாகும்.
இக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது ஏற்றிருக்கும் சவுதி அரேபியா, அனைத்து உறுப்பினர் நாடுகளையும் இந்த சந்திப்பிற்காக சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.
தீவிரமடைந்து வரும் காசா மீதான இஸ்ரேலின் ராணுவ தாக்குதல்கள், அப்பாவி காசா மக்கள் படும் துன்பங்கள் குறித்தும், வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கவும்அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு பிறகு சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் ஒரு சுமூக உறவுக்கான முயற்சிகளை அண்மையில் மேற்கொண்டு வந்தது.
ஆனால், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது போரை அறிவித்து காசா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்த தொடங்கியதும், அந்நாட்டுடன் அனைத்து பேச்சுவார்த்தையையும் நிறுத்தி வைத்திருக்கிறது.