எயார் ஏசியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொனி பெர்னாண்டஸ், மசாஜ் செய்வித்தபடி அலுவலக முகாமைத்துவ கூட்டத்தை சூம் மீட்டிங்காக நடத்தியுள்ளார்.
AirAsia விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் (Tony Fernandes) LinkedIn சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள இப்படத்துக்கு இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
டோனி உடம்பில் மேல் சட்டையின்றிக் காணப்படுகிறார். அவரது உடம்பைப் பெண் ஒருவர் பிடித்துவிடுகிறார்.
அந்தப் படத்தைப் பார்த்த இணையவாசிகளில் பலரும் அதனை விமர்சித்து பதிவிடுகிறார்கள்.
மற்றும் சிலரோ “இவரல்லவோ பொஸ்” என்று புகழ்கின்றனர். இணையம்வழி சந்திப்பை மேற்கொள்ளும் வேளையில் மசாஜ் சேவையையும் பெற்றுக்கொள்ளும் அவரது செயல் புதியதொரு வேலைக் கலாசாரத்தை உருவாக்கியிருப்பதாக அவர்கள் கூறினர்.
வாரம் முழுதும் ஓய்வின்றி உழைத்ததால் வேலைக்கு இடையே மசாஜ் சேவையைப் பெறுவதாகத டோனி அந்தப் படத்துக்குக் கீழ் பதிவிட்டிருந்தார்.
ஆனால், சிலர் டோனியின் செயலுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.
வேலையில் நிபுணத்துவத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று அவர்கள் கூறினர்.
“உங்களுக்கு உடலைப் பிடித்துவிடும் பெண்ணுக்குச் சங்கடம் ஏற்படலாம். ஆனால், நீங்கள் முதலாளியாக இருப்பதால் உங்களை எதிர்த்து அவர் வாயைத் திறக்காமல் இருக்கிறார்” என்று LinkedIn பயனீட்டாளர் ஒருவர் கருத்துக் கூறியிருந்தார்.
“நன்கு அறியப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் முதிர்ச்சியடைந்த மனிதருமான ஒருவர் மேல்சட்டையின்றி மசாஜ் சேவையைப் பெற்றுக்கொண்டு இணையத்தில் நிர்வாகச் சந்திப்பை நடத்துவது முறையல்ல. பதவியின்றி வெறும் மனிதராக இருந்தாலும் அது சரியான செயல் அல்ல” என்றார் மற்றொருவர்.