இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் சில நாடுகள் மூட்டைப் பூச்சிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிரான்ஸில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கின்றது.
வீடுகளில் உள்ள படுக்கைகள் மட்டுமல்லாமல் ரயில்கள், பஸ்கள் மற்றும் திரையரங்குகள் எனப் பல இடங்களில் அவை தென்படுவதால் பல சுகாதார பிரச்சினைகள் தோன்றி வருகின்றன.
மூட்டைப்பூச்சிக்கு ஐரோப்பிய நாடுகள் ஏன் அஞ்சுகின்றன?
மூட்டைப்பூச்சிகளைப் பொதுத் தொந்தரவாக மட்டும் கருதமுடியாது. அவை தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன.
பயணத்துறைக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
பிரான்ஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறவிருக்கின்றன. இதனால் பல மில்லியன் மக்களின் வருகையை எதிர்பார்த்திருக்கும் பிரான்ஸ் மூட்டைப் பூச்சி பிரச்சினையால் பெரும் பீதியில் உள்ளது.
மூட்டைப்பூச்சிகளின் திடீர் அதிகரிப்பிற்கான காரணங்கள்
கொரோனா தொற்றுக்குப் பின்னர் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்துள்ளதால், அவற்றின் எண்ணிக்கை கூடியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வழக்கமான பூச்சிக்கொல்லிகளுக்கு அவை எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூட்டைப்பூச்சிகளின் இனப்பெருக்கமும் ஒரு காரணம். பெண் மூட்டைப்பூச்சிகளால் நாளொன்றுக்கு 5 முட்டைகள் வரை இடமுடியும்.
ஓராண்டு வரை ஆயுள் கொண்ட அவை மாதக் கணக்கில் உணவு இல்லாமல் உயிர் வாழக்கூடியவை.
நடவடிக்கை எடுக்கும் நாடுகள்
ஐரோப்பிய நாடுகள் இந் நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கின்றன.
பாரிசிஸிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் ரயில்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன.
மூட்டைப்பூச்சிகளை ஒழிக்க என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க பிரான்ஸில் அரசாங்க அதிகாரிகள் அவசரக் கூட்டம் நடத்தினர். பிரான்ஸ் ரயில்களில் மோப்ப நாய்கள் விடப்பட்டுள்ளன. சில விமானங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது.