கொரோனா வைரஸ் தொற்றப் பரவலின்போது, இரண்டாவது தேசிய முடக்கநிலையை அறிவிப்பதைவிட அரசாங்கம், “மக்களை சாக விடுங்கள்” என விட்டுவிட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak) கூறியதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இங்கிலாந்து எவ்வாறு கிருமித்தொற்றைக் கையாண்டது என்பது குறித்து நேற்று (20) நடைபெற்ற விசாரணையில் அந்தத் தகவல் வெளியானது.
கொரோனா காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த பெட்ரிக் வலன்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதியன்று நடந்த சந்திப்பின் குறிப்புகளைத் வலன்ஸ் எழுதி வைத்துள்ளார்.
அப்போது பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனும் (Boris Johnson) நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனாக்கும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கொரோனா பரவல் சூழலின்போது ஜான்சனுடைய உயர் ஆலோசகராக இருந்த டொமினிக் கம்மிங்ஸ் (Dominic Cummings) சந்திப்பின்போது தாம் கேட்டதை வலன்ஸிடம் கூறியிருக்கிறார்.
வலன்ஸ் எழுதி வைத்த குறிப்புகள் விசாரணையின் போது காண்பிக்கப்பட்டன.
“பொதுமக்கள் பலியாகட்டும், பரவாயில்லை என்று ரிஷி சொன்னார். இது தலைமைத்துவத்தின் குறைபாட்டைக் காட்டுகிறது,” என்று கம்மிங்ஸ் கூறியதாக அந்தக் குறிப்புகளில் எழுதப்பட்டிருந்தது.
இந்தச் சர்ச்சை குறித்துத் தனித்தனியாக பதிலளிப்பதைவிடப் பிரதமர் சுனாக் விசாரணைக் குழுவிடம் சாட்சியம் வழங்கும்போது தமது நிலையை எடுத்துக்கூறுவார் என்று அவரது பேச்சாளர் தெரிவித்தார்.
மூலம் : Reuters