கடுமையான காலநிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பட்டினிகிடக்க நேர்கிறது.
கடந்த ஆண்டு மாத்திரம் 27 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் வாடியதாக Save the Children அற நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது 2021ஆம் ஆண்டிலும் பார்க்க 135 சதவீதம் அதிகமாகும்.
12 நாடுகளில் பட்டினியால் வாடும் சுமார் 57 மில்லியன் பேரில் அரைவாசி குழந்தைகள் ஆவர்.
பலத்த மழை அல்லது கடும் வறட்சி போன்ற அதீத வானிலை மாற்றங்கள் அதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளே அதில் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆசியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானில் சுமார் 2 மில்லியன் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு இல்லை. கடந்த ஆண்டு அங்கு நேர்ந்த கடுமையான வெள்ளம் அதற்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.
உலகெங்கும் இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளில் சுமார் 18 மில்லியன் பேர் பட்டினிக்கு ஆளாகக்கூடுமென மதிப்பிடப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முந்திய நிலையோடு ஒப்பிடும்போது அது சுமார் 20 சதவீதம் அதிகமாகும்.
பட்டினி கிடப்பதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் முதலீடுகளுக்கு முன்னுரிமை தருமாறு Save the Children அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
போர், மோசமான சுகாதாரக் கட்டமைப்பு போன்ற நெருக்கடிகளைத் தவிர்க்க உதவுமாறு அந்த அமைப்பு உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டது.