மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தென்படத் தொடங்கிவிட்டன.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன கன மழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான வீதிகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வீதிகளில் வெள்ளம் – படகுகளில் மக்கள் மீட்பு
சென்னையில் சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ மழை வரை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
இதனால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் படகு சேவைகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர் என மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
மிக்ஜாம் புயல் எங்கு நிலைகொண்டிருக்கும்?
இன்று (04) காலை நிலவரப்படி, மிக்ஜாம் புயல் தீவிரப் புயலாக மாறியிருக்கிறது.
சென்னையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – வடகிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கு கரையைக் கடக்கும்?
தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, நாளை (05) காலை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும்.
சென்னை விமான நிலையத்தை நீர் சூழ்ந்தது
சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலையின் காரணமாக இன்று நள்ளிரவு வரை விமான சேவை இரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.
சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள், தரையிறங்க ஏதுவான சூழல் இல்லாத நிலையில் பெங்களூரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
மிகவும் அவசியமான சூழலில் மட்டும் விமான பயணங்களை மேற்கொள்ளுமாறும், பிற பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில் சேவைகளும் இரத்து
கனமழை காரணமாக ஒரு சில ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்கள், வியாசர்பாடி – பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ரத்தாகியுள்ளன.
அதே போல சென்னைக்கு வர வேண்டிய 6 ரயில்களும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று (04) காலை 8 மணி வரை இரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டாலும், பரங்கிமலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பாடசாலைகளுக்கு பொது விடுமுறை
மிக்ஜாம் புயல் நாளை (05) தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த மாவட்டங்களின் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நாளை ( 05) விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் அல்லது நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.