இந்திய பாராளுமன்றத்திற்குள் நேற்று புதன்கிழமை (13) அத்துமீறி நுழைந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னைய தாக்குதல்
2001ஆம் ஆண்மு டிசெம்பர் 13 அன்று பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் ஐவர் திடீரென உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 6 டெல்லி பொலிஸார் உயிரிழந்தனர். இறுதியில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.
2014இல் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற சில மாதங்களில் பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த மே 28 அன்று, இப்புதிய கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நேற்றைய அத்துமீறல்
இந்நிலையில், 2001 தாக்குதல் நடந்து 22 வருடங்களான நிலையில், நேற்று (13) அதன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்றத்தின் வழக்கமான அலுவல் நடைபெற்றன.
அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திடீரென குதித்த இருவர், “சர்வாதிகார ஆட்சிய ஒழிக” என்று கோஷம் எழுப்பிக் கொண்டே சபாநாயகர் அருகே செல்ல முயன்றனர்.
அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த கேன் போன்ற உருளையை வீசியதில், மஞ்சள் வர்ண புகை வெளிக்கிளம்பியது. இதில் உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்தச் சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்த போதிலும், வேறு சில உறுப்பினர்கள் துணிச்சலுடன் அந்த மர்ம நபர்கள் இருவரையும் நெருங்கி, வளைத்துப் பிடித்து, அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதேவேளை, பாராளுமன்றத்திற்கு வெளியே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கோஷங்களை எழுப்பி கொண்டே வர்ண புகை குண்டை வீசினர். அவர்களும் டெல்லி பொலிஸாரால் உடனே கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்புப் பணியாளர்கள் இடைநிறுத்தம்
மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
பாராளுமன்ற பாதுகாப்புக் குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனையடுத்து பாதுகாப்பு பணியாளர்கள் 8 பேரை பாராளுமன்ற செயலகம் அதிரடியாக இடைநிறுத்தம் செய்தது.
மேலும், இந்திய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.