சிங்கப்பூருக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பிரான்ஸின் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
பிரான்ஸின் பிரதமராக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் கேப்ரியல் அட்டலுக்கு (Gabriel Attal) வாழ்த்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய பொறுப்பில் வெற்றி பெற பிரான்ஸ் பிரதமருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் சேர்ந்து பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ கூறினார்.
இரு நாடுகளும் 2022ஆம் ஆண்டு கையெழுத்திட்ட மின்னிலக்க, பசுமைப் பங்காளித்துவ (Digital and Green Partnership) ஒப்பந்தம் வளர்ந்து வரும் அந்தத் துறைகளில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரும் பிரான்ஸும் அரச தந்திர உறவின் 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கின்றன.
சிங்கப்பூருக்கு வருகை தருமாறு விரைவில் அட்டலுக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் லீ மேலும் தெரிவித்தார்.