கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று (25) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் வீதி பாதுகாப்பு வேலியிலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இராஜாங்க அமைச்சரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.