பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதுடன், தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்..
நாடு முழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி பொலிஸார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் என சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருப்பதால், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ- இன்சாப் (பிடிஐ) கட்சியின் சின்னமான கிரிக்கெட் பேட்டிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் அக்கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.