இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் நேற்று (12) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இதனைத் தொடங்கி வைத்தனர்.
நிதித் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்துள்ளது. நமது வளர்ச்சி அனுபவங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கை மற்றும் மொரீஷியஸுடன் இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்மூலம் வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அனுபவம் கிடைக்கும். இது அந்நாடுகளில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் என்பதுடன் நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும்.
இலங்கை மற்றும் மொரீஷியஸுக்கு பயணிக்கும் இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கு பயணிக்கும் மொரீஷியஸ் நாட்டினருக்கும் யுபிஐ செட்டில்மென்ட் சேவைகள் கிடைக்க இந்த நடவடிக்கை உதவும்.
மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், மொரீஷியஸில் ரூபே முறையின் அடிப்படையில் மொரீஷியஸ் வங்கிகள் அட்டைகளை வழங்கவும், இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் நிலவும் பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளுக்கு ரூபே அட்டையைப் பயன்படுத்தவும் உதவும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.