எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 70 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் நேருக்கு நேர் போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர்.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான நியமனங்களைப் பெற்றிருக்கிறார்.
அவருக்கு 1,968 பேராளர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், ஜார்ஜியா மாநிலத்தின் முடிவுகள் வரத்தொடங்கியதும் அவர் அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக Edison ஆய்வு நிலையம் கூறியது.
மேலும், மிசிசிபி (Mississippi), வாஷிங்டன் (Washington), வட மேரியானா (Northern Mariana) தீவுகள் ஆகியவற்றின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் உறுதிசெய்யப்பட்ட பிறகு அதிபர் பைடன் அறிக்கை வெளியிட்டார்.
அமெரிக்காவின் ஜனநாயகத்தைக் காப்பதா அல்லது தகர்ப்பதா என்பதை முடிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் (Donald Trump) குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இன்று (13 மார்ச்) தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.