தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்தில் இருந்து நீக்கும் வகையில் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தோல்வியடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், இங்கிலாந்து அரசாங்கத்தால் பாதுகாப்பான நாடாகக் கருதப்படும் ருவாண்டாவுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தோல்வியுற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு ஏற்கெனவே £3,000 வழங்கப்பட்டு வந்தது.
எனினும், புலம்பெயர்ந்தோர் மூன்றாவது நாட்டிற்குச் செல்வதற்கு பணம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பயனடையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் வசிக்கவோ அல்லது வேலை செய்யவோ உரிமை இல்லை என்று கருதப்படுபவர்கள் ருவாண்டாவிற்கு இடம் பெயர்வதற்கு £3,000 வழங்கப்படும்.
அங்கு அவர்களுக்கு வீடுகளைப் பெறுவதற்கும், படிக்கவும், பயிற்சி செய்யவும், வேலை செய்யவும், ஐந்து ஆண்டுகள் வரை உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.