ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம், இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டத்தை, கடந்த 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இலங்கை ஆரம்பித்திருந்தது.
இதன்படி, இந்தியா, சீனா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டது.
இந்த காலம், கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், குறித்த திட்டத்தை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முன்னோடித்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.