இங்கிலாந்தில் 15 வயதுக்குக் குறைவான இளையர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்பது விரைவில் தடைசெய்யப்படலாம்.
அது குறித்த புதிய மசோதா மீது இங்கிலாந்து நாடாளுமன்றம் வாக்களிக்கவிருக்கிறது.
புதிய சட்டம், புகை பிடிக்காத முதல் தலைமுறையை உருவாக்கக் கைகொடுக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
புதிய புகையிலை, மின் சிகரெட்டுகள் சட்டம் நடப்புக்கு வந்தால் இந்த ஆண்டு 15 வயதை எட்டும் அல்லது அதற்கும் குறைவான வயதுடைய இளையர்கள் ஒருபோதும் புகையிலைப் பொருள்களை வாங்க முடியாது.
பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak) கடந்த ஆண்டு இந்தப் புதிய கொள்கையை அறிவித்தார்.
இங்கிலாந்தில் சிகரெட் வாங்கச் சட்டப்படி அனுமதிக்கப்படும் வயது வரம்பு ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தப்படும்.
இறுதியில் மக்கள்தொகையில் எவரும் சிகிரெட்டுகளை வாங்கச் சட்டப்படி அனுமதி இருக்காது.
இங்கிலாந்தில் தற்போது 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சிகரெட்டுகளையோ, புகையிலைப் பொருள்களையோ விற்பது சட்டப்படி குற்றம்.
இளையர்கள் மின் சிகரெட்டுகள் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் புதிய சட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.