உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், சிகிச்சை முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வீடு திரும்பியிருந்தார்.
62 வயதான ஸ்லேமேன் என்ற அந்த நபருக்கு, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் (MGH) மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
மருத்துவ உலகில் புதிய சாதனையாக இது கருதப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து 2 மாதங்களில் ஸ்லேமேன் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்லேமேனின் இறப்பிற்கும் அறுவை சிகிச்சைக்கும் தொடர்பில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“ஸ்லெமேனின் இறப்பு எங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அவர் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முன்வரும் பலரை ஊக்கப்படுத்துவார் என்பது ஆறுதலாக உள்ளது. அவரை பராமரித்த மருத்துவர் குழுவுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.
“அவர்களின் அறுவை சிகிச்சையால் தான் நாங்கள் மேலும் 2 மாதங்கள் அவருடன் வாழ்ந்தோம்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 100,000இற்கும் மேற்பட்டவர்கள் தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தவணை வருவதற்கு முன்பே இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.