மெக்சிகோ எல்லைவழிச் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைவோரைத் தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவு, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. என்னும், ஆட்கடத்தலால் பாதிக்கப்படுவோர், பெரியோரின் துணை இல்லாமல் வரும் பிள்ளைகள் போன்ற சில தரப்பினருக்கு இந்தத் தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அடைக்கலம் நாடிச் செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எல்லைகளைச் சட்டவிரோதமாகக் கடப்போரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்தாண்டு டிசெம்பர் மாதம் தினமும் சராசரியாக 10,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக வருவோருக்கு அடைக்கலம் கிடையாது. அப்படி வருவோர் மீண்டும் அவர்களின் நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவர். அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை நாளுக்கு 1,500க்கும் குறைவாகும்போது இந்தத் தடை நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.