அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் துப்பாக்கி தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் தானும் ஒரு மகனுக்குத் தந்தைதான் என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு ஜோ பைடன் கூறினார்.
2018ஆம் ஆண்டு ஹன்டர், கொக்கேய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது ஒரு கைத்துப்பாக்கியை வாங்கினார்.
துப்பாக்கியை வாங்கும்போது தாம் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று 54 வயது ஹன்டர் பொய் சொன்னதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அத்துடன், சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தது உட்பட அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மூன்றிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சம் 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால், அவர் முதல்முறை குற்றவாளி என்பதால் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என்று கூறப்படுவதுடன், தண்டனை அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவரின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.