கென்யாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 கொலைகளை செய்த சீரியல் கில்லர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் நைரோபியில் ஒரு குப்பைக் கிடங்கிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், அங்கு கட்டப்பட்ட நிலையில் பல பிளாஸ்டிக் பைகள் கிடைப்பதாக உள்ளூர்வாசிகள், பொலிஸாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர்ந்து, உடனடியாக அங்கு வந்த பொலிஸார் அந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்த ஒன்பது சடலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு அந்தப் பகுதியிலிருந்த காலின்ஸ் ஜுமைசி கலுஷா என்ற 33 வயது இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, கடந்த திங்களன்று அதிகாலையில் ஒரு மதுபான கிளப் ஒன்றில் அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த ஒன்பது கொலைகளை தான் செய்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 42 கொலைகளைச் செய்திருப்பதாக அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.
பின்னர், இந்த 42 கொலைகளில் முதல் கொலையே தன்னுடைய மனைவிதான் என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் 18 முதல் 30 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே பாணியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இத்தனைக் கொலைகளை அவர் எதற்காகச் செய்தார் என்பது தெரியாததால் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் வாடகைக்குத் தங்கியிருந்த கொலையாளியின் வீட்டிலிருந்து, ஒரு கத்தி, 12 சாக்குகள், 2 கையுறைகள், ஹார்ட் டிரைவ், 8 அலைபேசிகள், பெண்களின் கைப்பை, பெண்களின் உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.