உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் சாதனை புரிந்தவரான ஸ்பெயினைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் மொரேரா, தமது 117ஆவது வயதில் காலமானார். பிரான்யாஸ், 1907 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர்.
“மரியா பிரான்யாஸ் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியாக அவரது உயிர் பிரிந்தது” என்று அவரது குடும்பத்தார் X தளத்தில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், “அவரது அறிவுரைகளையும் பரிவு மனப்பான்மையையும் நாங்கள் எப்போதும் நினைவுகூருவோம்” என்றும் அதில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பிரான்யாஸின் கடைசி மகள் ரோஸா மொரேட், தமது தாயார் மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்றும் உடலில் எந்த வலியும் இல்லாமல் நலமுடன் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தாம் உடலளவில் மிகவும் பலவீனமாக உணர்வதாகக் பிரான்யாஸ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். “நேரம் நெருங்கிவிட்டது. அழாதீர்கள், அழுவது எனக்குப் பிடிக்காது. எனக்காகத் துயரப்படாதீர்கள். நான் எங்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று அவரது குடும்பத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் பிரான்யாஸ் பதிவிட்டார்.
இதற்குமுன்னர் பிரான்ஸைச் சேர்ந்த 118 வயது லுஸில் ராண்டன் உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற அடையாளத்தை வைத்திருந்தார். எனினும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார்.
அதன் பின்னர் உலகிலேயே மிகவும் வயதானவர் என்று பிரான்யாஸை, கின்னஸ் உலக சாதனை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.