இஸ்ரேலின் Hecht Museum எனும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 3,500 வருடங்கள் பழைமைவாய்ந்த ஜாடியை 4 வயதுச் சிறுவன் தவறுதலாக உடைத்துவிட்டான்.
காட்சிப் பொருள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தும் பெரியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், மேற்படி சிறுவன் வேண்டுமென்றே ஜாடியை உடைக்கவில்லை என்றும் அந்த ஜாடியில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், சிறுவன் ஜாடியைக் கொஞ்சம் வெளியே இழுத்ததால் அது கீழே விழுந்து நொறுங்கியதாக அருங்காட்சியகம் குறிப்பிட்டது.
இந்நிலையில், அச்சிறுவனை அருங்காட்சியகத்திற்கு மீண்டும் அழைத்துள்ளது.
ஜாடி உடைந்தபோது சிறுவனின் பெற்றோர், அவனை உடனடியாக வளாகத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுவிட்டனர்.
குடும்பத்தார் அரும்பொருளகத்தை ஒழுங்காகப் பார்க்கவில்லை என்பதால் அவர்களை மீண்டும் அழைக்க எண்ணியதாக Hecht Museum நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஜாடியைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீரமைப்பு பணி எப்படி நடக்கும் என்பதை அறிய சிறுவனுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்புவதாக நிர்வாகம் கூறியது.
Hecht Museum அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் பொருள்கள் கண்ணாடிக்குள் இருப்பதில்லை.
வரலாற்றுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே கண்ணாடி கூடத் தடையாக இருக்கக்கூடாது என்று அதன் நிர்வாகம் நினைக்கிறது.
சிறுவன் ஜாடியை உடைத்துவிட்டாலும், தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் Hecht Museum நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.