மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வாகனம் ஒன்று பயணிகளைச் ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் மீது மோதியதில், குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியா – நைஜர் மாகாணம், அகெயி நகரில் நேற்று (08) இந்த பாரிய விபத்து சம்பவம் பதிவாகியுள்ளதாக, அந்நாட்டின் அவசரகால பதிலளிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் குறைந்தது 50 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என்று நைஜர் மாநில அவசர மேலாண்மை முகமையின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லாஹி பாபா-அரப் தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் வாகனம் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வீதியில் எதிரே வேகமாக வந்த டிரக் வாகனம் எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 வாகனங்களும் வெடித்து சிதறியுள்ளன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புக்குழுவினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.