தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா போர் ஒத்திகையை முன்னெடுத்துள்ளது.
ஜாயின்ட் ஸ்வார்ட் “2024பி” என்ற பெயரில் இந்த போர் ஒத்திகை முன்னெடுக்கப்பட்டதாக, தமது சமூக வலைதள பக்கத்தில் சீன இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஒத்திகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, ராக்கெட் படை மற்றும் பிற படையினரும் பங்கேற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்கான தயார் நிலை, முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடுவது, கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் போன்றவற்றை முன்னிறுத்தி இந்த ஒத்திகை நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்வான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, 9 இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக, சீன இராணுவம் அதில் தெரிவித்துள்ளது.
தாய்வான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன கடலோர காவல்படையும் சில கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.
போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் பல முனைகளில் இருந்தும் கூட்டுத் தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிகளை “பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான வலுவான தடுப்பு” மற்றும் “தேசிய இறையாண்மையை பாதுகாக்க மற்றும் தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான சட்டபூர்வமான மற்றும் தேவையான நடவடிக்கை” என்று சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவின் இந்நடவடிக்கைக்கு தாய்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.