பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்யுமாறு பங்களாதேஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷ் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் ஷேக் ஹசீனா (77 வயது) பதவி விலகி, கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது அவர் இந்தியாவில் தங்கியுள்ளார்.
பங்களாதேஷை விட்டு வெளியேறிய பிறகு பொது இடங்களில் அவர் தென்படவில்லை. இறுதியாக அவர் புதுடில்லிக்கு அருகேயுள்ள இராணுவத் தளத்தில் காணப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் நீதிமன்றத்தின் அரசாரங்கத் தரப்புத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சுமார் 15 வருடங்களாக பிரதமர் பதவில் இருந்த ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகப் புதிய தற்காலிக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பதால் பங்களாதேஷ் கோபம் அடைந்துள்ளது. இருநாட்டுக்கும் இடையே கைதிப் பரிமாற்ற உடன்பாடு உள்ளது. எனவே, ஷேக் ஹசீனா குற்றச்சாட்டை எதிர்நோக்க பங்களாதேஷ் செல்ல வேண்டியது கட்டாயமாகலாம்.
ஆனால், அரசியல் நோக்கம் இருந்தால் கைதிப் பரிமாற்றத்தை நிராகரிக்கலாம் என்று உடன்பாடும் உண்டு.