சிரியாவில் ஏற்பட்ட புரட்சி நிலைமையினால் அந்நாட்டவர்களின் புகலிட கோரிக்கையை இங்கிலாந்து தற்காலிகமாக தடுத்து வைத்துள்ளது.
முன்னதாக ஜேர்மன், சுவீடன், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் ஆகியன சிரியா நாட்டவர்களின் புகலிட கோரிக்கையை தடுத்து வைத்தன. தற்போது அந்தப்பட்டியலில் இங்கிலாந்தும் இணைந்துகொண்டுள்ளது.
இங்கிலாந்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் இது குறித்து தெரிவிக்கையில், , “பஷார் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் நிலைமை மிகவும் வேகமாக மாறி வருகிறது. சிலர் சிரியாவுக்கு திரும்புவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, தற்போதைய நிலைமையை நாங்கள் மதிப்பீடு செய்யவும் கண்காணிக்கவும், சிரியா தொடர்பான புகலிட கோரிக்கை மனுவை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளோம்” என்றார்.
முன்னாள் குடியேற்ற அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறுகையில், “சிரியர்களின் புகலிட மனுக்கள் பெரும்பாலும் அடிப்படையற்றதாக மாறியுள்ளன. இப்போது அநாவசியமான மனுவுகளை விரைவில் நிராகரித்து, அவர்களை திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்புடைய செய்தி : நாட்டைவிட்டு ஓடிய சிரியா ஜனாதிபதி; மாளிகைக்குள் புகுந்து செல்ஃபி எடுத்து கொண்டாடிய மக்கள்!
ஜேர்மன் உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகள் சிரியாவின் நிலைமை சீராகும் வரை புகலிட மனுக்களை நிலுவையில் வைக்க தீர்மானித்துள்ளன. ஜேர்மனியின் அகதி மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் தகவல்படி, சிரியா தொடர்பான 47,000 மனுக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
ஆஸ்திரியாவும் இதே முடிவை எடுத்து, “நிலைமை தெளிவாகும் வரை பொறுமையாக இருப்பது முக்கியம்” என்று கூறியுள்ளது. சுவீடன், பிரான்ஸ், நோர்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் மனுக்கள் மீதான நடவடிக்கையை நிறுத்தியுள்ளன.
சிரியாவில் நிலைமை முடிவிற்கு வரும் வரை இந்த முடிவுகள் தொடரும் என நம்பப்படுகிறது.