அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angeles) எரியும் காட்டுத் தீ தற்போது ஹாலிவுட் வட்டாரத்திற்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸில் குறைந்தது 5 இடங்கள் தொடர்ந்து தீப்பற்றி எரிகிறது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தீயணைப்பு பிரிவினர் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகள், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தீ பரந்த அளவில் பரவி வருகின்றமையால் போதுமான தீயணைப்பாளர்கள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வானில் செல்லும் ஹாலிகாப்டர்கள் தண்ணீரைப் பாய்ச்சி, தீயை அணைக்க முயற்சி செய்கின்றன.
இந்த காட்டுத் தீ பரவலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 100,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.
ஆபத்தில் ஹாலிவுட் பிரபலங்கள்
சுமார் 1,500 கட்டிடங்கள் தீயில் கருகிப் போயின. அதேவேளை, “ஹாலிவுட்” என்று குறிப்பிடும் பிரதேசத்திற்குப் பின்னால் உள்ள குன்றுகளில் புகை சூழ்ந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரில் நடிகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் உள்ளனர்.
கலையின் தலைநகரமான அங்குக் கட்டுக்கடங்காத தீயால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் ‘glitzy’ விருது நிகழ்ச்சி மற்றும் பமேலா ஆண்டர்சனின் (Pamela Anderson) திரைப்பட முதல் காட்சி உள்ளிட்ட சில முக்கிய நிகழ்சிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ; 30,000 பேர் வெளியேற உத்தரவு
சில பிரபலங்கள் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பதற்றம் நிறைந்த அந்த அனுபவத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பாடகியும் நடிகையுமான மென்டி மோர் (Mandy Moore). பிள்ளைகளுடனும் செல்லப் பிராணிகளுடனும் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாக அவர் Instagram இல் தெரிவித்தார்.
தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்காக வேண்டிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரபல Universal Studios கேளிக்கைப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.